Rotaract Club of University of Kelaniya
⌕
Story Cornerதமிழ்

“இருளின் அழைப்பு” – பகுதி 5

காலி முகத்திடலின் நள்ளிரவு தலையைத் துளைத்த அந்த விகாரமான சத்தமும், கண்களை மூடிய காரிருளும் அர்ஜுனின் சுயநினைவை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருந்தன. அவனது கைகள் தன்னிச்சையாக அந்தப் பெரிய கல்லை தூக்க முயன்றன. கடைக்காரன் பயத

S
By Senkini Moras · 3 min read

காலி முகத்திடலின் நள்ளிரவு

தலையைத் துளைத்த அந்த விகாரமான சத்தமும், கண்களை மூடிய காரிருளும் அர்ஜுனின் சுயநினைவை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருந்தன. அவனது கைகள் தன்னிச்சையாக அந்தப் பெரிய கல்லை தூக்க முயன்றன.

கடைக்காரன் பயத்தில் பின்வாங்கி, “வேண்டாம் அர்ஜுன்! கட்டுப்படுத்து… அந்த போன் உன் மூளையை ஆக்கிரமிக்க விடுடாதே!” என்று அலறினான்.

அர்ஜுன் தன் முழு ஆத்ம சக்தியையும் திரட்டி, தன் தலையிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டுக்கொண்டான். அந்த அதிர்ச்சியில் அவனது பார்வை சற்றே தெளிவடைந்தது. கையில் இருந்த கல் கீழே நழுவி விழுந்தது.

“ஓடு… இங்கிருந்து ஓடு!” மனதிற்குள் உறைந்திருந்த சுயநினைவு அவனைக் கூச்சலிட்டது.

அர்ஜுன் தன் கையில் இருந்த ‘நீல நிறக் பைண்டர் ஃபைலை’ இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, கொழும்பு நோக்கித் திரும்பும் அடுத்த ரயிலைப் பிடிக்க வெறித்தனமாக ஓடினான். கடைக்காரன் அவனையே வெறித்துப் பார்த்தபடி பாலத்தின் அடியில் உறைந்து நின்றான்.

ஆகஸ்ட் 21… இரவு 11:00 மணி.

கொழும்பு, காலி முகத்திடல்

கடலலைகளின் கர்ஜனையும், சீறிப்பாயும் காற்றின் கூச்சலும் அந்த இடத்தை மேலும் அச்சமூட்டுவதாக மாற்றியிருந்தன. மழைக்கால இரவென்பதால் கடற்கரையில் ஒரு மனிதர் கூட இல்லை. தாமரைக் கோபுரத்தின் வண்ண விளக்குகள் தூரத்தில் மங்கலாக ஒளிர்ந்துகொண்டிருந்தன.

அர்ஜுன் நனைந்த சட்டையோடு, நடுங்கும் உடலுடன் கடற்கரை சுவரின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.

இன்று இரவு 11:45 PM! நான்காவது புகைப்படத்தில் இருந்த அதே நாள், அதே நேரம், அதே இடம்!

அவனது போன் சட்டென அதிர்ந்தது. திரையில் ’11:30 PM’ என்று மாறியது. ‘புள்ளி’ (.) ஃபோல்டர் தானாகத் திறந்து, எட்டாவதாக ஒரு வீடியோ ஒளிபரப்பாகத் தொடங்கியது.

அதில்… அர்ஜுன் தன் கையில் ஒரு கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு, தன் சொந்தக் கழுத்தையே அறுத்துக் கொள்ளும் காட்சி ஓடியது!

“இல்லை… இது நான் இல்லை! இது வைரஸோ, பேயோ எதுவாக இருந்தாலும் என்னை அழிக்க முடியாது!” அர்ஜுன் போனை தரையில் வீசி எறிய முயன்றான்.

ஆனால், அவனது விரல்கள் போனை விட்டு விலக மறுத்தன. போனின் திரையிலிருந்து ஒரு கிய்ந்ந்த நீல நிற வெளிச்சம் பாய்ந்து அவனது கண்களுக்குள் ஊடுருவியது.

அவனது உடல் விறைத்தது. கால்கள் தன்னிச்சையாகக் கடலை நோக்கி நடந்தன. பாக்கெட்டில் இருந்த ஒரு மடிப்பு கத்தியை அவனது கை தானாகவே வெளியே எடுத்தது.

“அர்ஜுன்… நிறுத்து!”
இருளுக்குள்ளிருந்து ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது.
அர்ஜுன் திரும்பிப் பார்த்தான். கடலலைகளுக்கு நடுவே, ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி யாழினி நின்றுகொண்டிருந்தாள்! அவளது கருகிய முகம் இப்போது மேலும் விகாரமாகியிருந்தது.

“அந்த போனை உருவாக்கிய டாக்டர் விக்கிரம் வேறு யாருமல்ல… உனக்கு அந்த போனை விற்ற அதே கடைக்காரன் தான்!” யாழினியின் குரல் காற்றின் திசையெங்கும் எதிரொலித்தது. “அவன் மனிதர்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் தற்கொலை செய்ய வைக்கும் ஒரு உளவியல் பரிசோதனையைச் செய்கிறான். நானும்கூட இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனது போனை வாங்கித்தான் உயிரிழந்தேன்!”

அர்ஜுனின் மூளைக்குள் ஒரு மின்னல் அடித்தது.

அப்போது, இருளுக்குள்ளிருந்து கருப்பு கோட் அணிந்த ஒரு உருவம் மெல்ல நடந்து வந்தது. அது அந்த மொபைல் கடைக்காரன்! அவனது கையில் ஒரு சிறிய ரிமோட் சாதனம் இருந்தது.

“கண்டுபிடித்து விட்டாயா அர்ஜுன்?” கடைக்காரன் கொடூரமாகச் சிரித்தான். “டாக்டர் விக்கிரமின் இந்த டிஜிட்டல் வைரஸ் மனிதர்களின் பயத்தை மட்டுமே உணவாகக் கொள்ளும். நீ எவ்வளவு பயப்படுகிறாயோ, அவ்வளவு வேகமாக உன் மூளை இதன் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். இப்போது நேரம் 11:44 PM… இன்னும் ஒரு நிமிடத்தில் நீ இறப்பாய்!”

அர்ஜுனின் கை கத்தியை மெல்லத் தன் கழுத்தை நோக்கி நகர்த்தியது. கூர்மையான முனை தோலைத் தொட்டது. ரத்தம் சொட்டத் தொடங்கியது!

நான்காவது புகைப்படம் மெல்ல மெல்ல நிஜமாக மாறிக் கொண்டிருந்தது.

11:45 PM!

அர்ஜுன் தன் முழு பலத்தையும் திரட்டி, தன் கண்களை மூடினான். பயத்தை முழுமையாகத் தூக்கி எறிந்தான்.

“நான் பயப்படவில்லை… நீ உருவாக்கிய மாயையை நான் நம்பவில்லை!” என்று உரக்கக் கூவினான்.

அவன் கத்தியைத் தன் கழுத்தில் வெட்டுவதற்குப் பதிலாக, தன் முழுச் சக்தியையும் திரட்டி, கையில் இருந்த அந்த போனை நேராகக் கடலை நோக்கி ஓங்கி வீசியெறிந்தான்!

போன் வான்வெளியில் பறந்து சென்று, கொந்தளிக்கும் கடலலைகளுக்குள் மூழ்கியது.

அடுத்த கணம்… அர்ஜுனை ஆட்கொண்டிருந்த அந்த இருட்டு சக்தி முற்றிலும் விலகியது. அவனது கண்கள் இயல்பு நிலைக்கு வந்தன.

கடற்கரையில் நின்றிருந்த கடைக்காரன் (டாக்டர் விக்கிரம்) அதிர்ச்சியில் தன் ரிமோட்டைப் பார்த்தான். போனுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அந்த சிக்னல் அப்படியே எதிர்நோக்கி அவனது மூளைக்கே பாய்ந்தது!

“அய்யோ… என் மூளை… என் தலை வெடிக்கிறது!” என்று அலறியபடி, கடைக்காரன் தன் தலையைப் பிடித்துக்கொண்டு மணலில் சுருண்டு விழுந்து உயிரற்ற பிணமானான்.

கடலலைகளுக்கு நடுவே நின்றிருந்த யாழினியின் உருவம் மெல்ல ஒரு புன்னகையோடு காற்றில் கரைந்து மறைந்தது.

மறுநாள் காலை…

கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியில் உள்ள அந்த மொபைல் கடைக்குப் பூட்டு போடப்பட்டிருந்தது.

அர்ஜுன் அமைதியாகக் காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்தான். அவனது கழுத்தில் ஒரு சிறிய காயம் மட்டுமே இருந்தது. சூரிய வெளிச்சம் அவனது முகத்தில் கதகதப்பாகப் பட்டது.

திடீரென, அவனது பாக்கெட்டில் இருந்த புதிய போன் அதிர்ந்தது!

அர்ஜுன் நடுக்கத்தோடு போனை எடுத்தான். ஒரு தெரியாத எண்ணிலிருந்து புதிய மெசேஜ் வந்திருந்தது:

“போனை கடலில் வீசியதால் தப்பித்துவிட்டதாக நினைக்கிறாயா அர்ஜுன்? கடலின் அடியிலும் அந்த ‘புள்ளி’ (.) ஃபோல்டர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது…”

மெசேஜின் கீழே ஒரு புதிய புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது!

அதில்… அர்ஜுன் இப்போது நடந்து கொண்டிருக்கும் அதே இடத்தில், அவனுக்கு பின்னால்… கடலிலிருந்து நனைந்த உடலோடு வெளியேறி வரும் ஒரு பயங்கரமான கரம் அவனது நிழலைப் பிடிப்பது போல் இருந்தது!

அர்ஜுன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்….

(தொடரும்…)

Share this articleWhatsApp   Facebook   Copy link

Related articles

Story Corner
සිංහල · 4 min read

“හදවතට හොරෙන්” – අවසාන දිගහැරුම…

පසු දිනය සෙනසුරාදාවක් විය. ඉෂිනි උදෙන්ම අවදි වී පහළට පැමිණියාය. අද පාසල් යාමක් නොතිබූ නිසා ඇය සරල ගවුමකින් සැරසී, කොණ්ඩය ලිහිල්ව ගැටගසාගෙන සිටියාය. ඇය මුළුතැන්ගෙයට ගොස් උදෑසන කෑම සූදානම් කරන්නට පටන් ගත්තාය.ඒ අතරේ පඩිපෙළ

By Senkini Moras · 27 Oct 2026
Story Corner
தமிழ் · 3 min read

“இருளின் அழைப்பு” – பகுதி 9

புனித நகரத்தின் காரிருள் அர்ஜுனின் மணிக்கட்டு நரம்புகளில் கரிய நிறமாகப் பாயும் அந்த விஷம், அவனது உடலை உள்ளிருந்து எரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு வினாடியும் அவனது இதயத் துடிப்பு குறைய, நிழலின் கட்டுப்பாடு அவனது மூளையில் மேல

By Senkini Moras · 22 Oct 2026
Story Corner
සිංහල · 6 min read

“හදවතට හොරෙන්” – සිව්වන දිගහැරුම…

ඇය අසල සිටි පිරිමියා ඔහුට හුරුපුරුදුය. ඊයේ traffic light එක ළඟ… ඉෂිනි සමඟ සිනාසෙමින් කතා කළේත් ඔහුමය. චානුකගේ ඇස් සිහින් විය. “මේ මිනිහා මෙතනත්?” ඔහුට නොදැනුවත්වම අතේ තිබූ glass එක තදින් අල්ලාගත්තේය. “Mr. Edirisinghe?” අ

By Senkini Moras · 21 Oct 2026