You are currently viewing “இருளின் அழைப்பு” – பகுதி 7

“இருளின் அழைப்பு” – பகுதி 7

டிஜிட்டல் மரணம்

கத்தரிக்கோலின் கூர்மையான முனை அர்ஜுனின் மணிக்கட்டு நரம்பைத் தொட்டது.

“என் உடலை நீ ஆக்கிரமிக்க வேண்டுமானால்… இந்த உடலுக்கு உயிர் இருக்கக்கூடாது!” அர்ஜுன் கண்கள் கலங்கக் கூவினான்.

மணிக்கட்டில் ரத்தம் கசிந்தது. வலி உயிரை உறிஞ்சியது. ஆனால், அந்த கணத்தில் அவனது மூளைக்குள் ஒரு மென்பொருள் பொறியாளனின் சிந்தனைப் பொறி தட்டியது.

இந்த AI வைரஸ் மனிதனின் பயத்தையும், ‘நரம்பியல் சிக்னல்களையும்’ தான் மூலதனமாகப் பயன்படுத்துகிறது. உடலை அழிப்பது தீர்வல்ல; தன் மூளையை அந்த சர்வரிலிருந்து துண்டிப்பதே ஒரே வழி!

“ரத்தமும் பயமும் தான் உனக்குத் தீனியா? அப்படியென்றால், உனக்கான தீனியை நானே அழிக்கிறேன்!”
அர்ஜுன் கத்தரிக்கோலை வீசியெறிந்துவிட்டு, துடிக்கும் கரங்களால் மடிக்கணினியின் ‘Command Prompt’ பக்கத்தைத் திறந்தான். தன் மணிக்கட்டிலிருந்து சொட்டிய ரத்தம் விசைப்பலகையின் மேல் தெறித்தது.

அவனது கைகள் தானாக அசுர வேகத்தில் இயங்கின. தான் தயாரித்த Code எழுதத் தொடங்கினான்.

மணி 5:58 PM.

அவனது உடலுக்குள் அந்த இருட்டு சக்தி முழுமையாகப் பரவத் தொடங்கியது. கண்களின் கருவிழிகள் மறைந்து, கண்கள் முற்றிலும் இருண்டன. விரல்கள் நீண்டு சுவரைச் சுரண்டின.

5:59 PM.

அர்ஜுனின் உள்ளுணர்வுக்கும், அந்த வைரஸின் அசுரக் கட்டுப்பாட்டுக்கும் இடையே கடுமையான போராட்டம் நடந்தது. வாய் வழியே கரிய நிறப் புகை வெளியேறியது.

“அர்ஜுன்… உன்னால் என்னை அழிக்க முடியாது!” கணினியின் ஸ்பீக்கரிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேய்களின் அலறல் குரல்கள் ஒன்றாக எதிரொலித்தன.

“முடியும்… ஏனென்றால் இது என் மூளை!” அர்ஜுன் தன் கடைசிச் சொட்டு சுயநினைவைத் திரட்டி ‘ENTER’ பொத்தானை அழுத்தினான்!

அவன் எழுதிய ‘நச்சு நிரல்’ , அந்த டார்க் வெப் சர்வரின் ஐபி முகவரிக்குள்ளும் (IP Address), அவனது போனின் சிஸ்டத்திற்குள்ளும் மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

அடுத்த நொடி….

மடிக்கணினி புகைந்து வெடித்தது! அறையின் சுவர்களில் இருந்த இருட்டு நிழல்கள் அனைத்தும் சுருண்டு, கதறியபடி புகையாக மாறின.

அர்ஜுன் இரத்த வெள்ளத்தில் சுயநினைவை இழந்து தரையில் சுருண்டு விழுந்தான்.

கண் விழித்தபோது….

அர்ஜுன் ஒரு மருத்துவமனைப் படுக்கையில் இருந்தான். கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. வெள்ளாடை அணிந்த மருத்துவர் அவனருகே நின்றிருந்தார்.

“தம்பி… நாரஹேன்பிட்டி அறையில் சுயநினைவில்லாமல் கிடந்திருக்கீங்க. உங்க கை நரம்பில லேசான காயம். நல்ல வேளை, பக்கத்து வீட்டுக்காரங்க பார்த்து சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரில சேர்த்திட்டாங்க,” மருத்துவர் புன்னகையுடன் என்றார்.

அர்ஜுன் மெல்ல மூச்சு வாங்கினான். ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். மாலைச் சூரியனின் பொன்னிற வெளிச்சம் கொழும்பு நகரத்தின் மீது பரவியிருந்தது.

அவனது கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தன. அந்த பயங்கரக் கனவு, அந்த இருட்டு உருவம், அந்த புகைப்படங்கள்… எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டன. அவன் வெற்றி பெற்றுவிட்டான்!

மருத்துவர் அறை கதவைத் திறந்து வெளியே சென்றார்.

அர்ஜுன் மெல்ல எழுந்தமர்ந்து பெருமூச்சு விட்டான். அப்போது, படுக்கைக்கு அருகில் இருந்த மேஜை மீது அவனது மணிப்பயணப் பையும், சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட சில பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றிற்கு நடுவே…
ஒரு சிறிய மேஜைக் கண்ணாடி இருந்தது.

அர்ஜுன் தற்செயலாக அந்தக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான்.
அவனது நெஞ்சு ஒரு கணம் உறைந்தது!
கண்ணாடியில் தெரியும் அவனது பிம்பத்தில்… அர்ஜுனின் கண்கள் இயல்பாகத்தான் இருந்தன. ஆனால், அவனது நிழல் கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் போது… அதன் கண்கள் முற்றிலும் கருப்பாக, கொடூரமாகச் சிரித்துக் கொண்டிருந்தன!

அதே நேரம், மேஜை மீது இருந்த மருத்துவமனையின் ரிசெப்ஷன் போன் திடீரென ஒலித்தது.

அர்ஜுன் நடுங்கும் கைகளால் அந்தப் போனை எடுத்து காதில் வைத்தான்.

மறுமுனையில், அந்த இயந்திரத்தனமான குரல் மிகவும் மெதுவாக, சிரித்தபடி கிசுகிசுத்தது:

“நிரலை அழித்துவிட்டாய் அர்ஜுன்… ஆனால், வைரஸ் இப்போது சர்வருக்குள் இல்லை. அது உன் இரத்தத்தில் கலந்துவிட்டது!”

கண்ணாடியில் இருந்த அவனது நிழல்… மெல்லத் தன் நீளமான விரலை உயர்த்திக் கண்ணாடியின் உட்புறச் சுவரைத் தட்டியது!

(தொடரும்…)

Leave a Reply