You are currently viewing “இருளின் அழைப்பு” – பகுதி 3

“இருளின் அழைப்பு” – பகுதி 3

இருளின் கண்கள்

பிடறியில் வீசிய அந்த உறைபனி போன்ற காற்று, அர்ஜுனின் உடலைத் தம்பிக்க வைத்தது. பயத்தின் உச்சத்தில் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.

அவனுக்குப் பின்னால் உள்ள இருக்கையில்… ஒரு முதியவர் அமைதியாகக் கண் மூடித் தூங்கிக் கொண்டிருந்தார். வேறு யாருமில்லை. ஆனால், அந்த இருக்கையைச் சுற்றி மெல்லிய புகை போன்ற ஒரு இருள் மண்டியிருந்தது. ரயிலின் ஏசி காற்றையும் தாண்டி, அழுகிய பிணத்தின் துர்நாற்றம் வீசியது.

அர்ஜுன் சட்டென்று எழுந்து நின்று தன் போனைப் பார்த்தான். ஐந்தாவது புகைப்படத்தில் இருந்த அந்த நீளமான விரல்கள் கொண்ட உருவம், இப்போது சற்று நகர்ந்து அவனது தோளைத் தொடுவது போல மாறியிருந்தது!

“இது எப்படி சாத்தியம்? படம் நேரலை போல மாறுகிறதா?” அவனது கை நடுக்கத்தில் போன் கீழே விழப் பார்த்தது.

ரயில் சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. வெளிச்சம் முற்றிலும் மறைந்து, பெட்டி முழுவதும் காரிருள் சூழ்ந்தது. பயணிகளின் பேச்சரவம் சட்டென அடங்கி, மரண அமைதி நிலவியது.

அந்த இருளில்… அர்ஜுனின் காதுகளுக்கு மிக அருகில் ஒரு பெண்ணின் நலிந்த குரல் கேட்டது.

“அர்ஜுன்… என்னை விட்டுப் போகாதே… என்னை ஏன் காப்பாற்றவில்லை?”

அந்தக் குரல் அவனுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் அவன் உயிருக்கு உயிராக நேசித்து, இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துபோன அவனது காதலி யாழினியின் குரல்!

“யாழினி…?” அர்ஜுனின் தொண்டை வறண்டது.

சுரங்கப்பாதையின் இருளுக்குள், இரண்டு சிவந்த கண்கள் அர்ஜுனின் கண் எதிரே மிதந்தன. அந்தப் பயங்கரமான உருவத்தின் முகம் மெல்லத் தெளிவடைந்தது. அது முற்றிலும் சிதைந்த, பாதி கருகிய யாழினியின் முகம்! ஆனால் அவளது கைகள்… அதே நீளமான, கூர்மையான விரல்களாக இருந்தன.

அவள் தன் நீளமான விரலால் அர்ஜுனின் நெஞ்சைத் தொட்டாள். அந்த இடம் உறைந்து போவது போல் கடும் குளிர் பரவியது.

“அந்தப் போன்… அது ஒரு சாபம், அர்ஜுன். அதை விற்றவன் உன்னைத் தேடி வரவில்லை… உன்னுள் இருக்கும் இரத்தக்கறையைத் தேடி வந்திருக்கிறான்!” என்று அலறினாள்.

திடீரென ரயில் சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்தது. சூரிய வெளிச்சம் பெட்டிக்குள் பளிச்சிட்டது!

அர்ஜுன் அலறி அடித்துக் கொண்டு கீழே விழுந்தான். சுற்றிலும் இருந்த பயணிகள் அவனை விசித்திரமாகப் பார்த்தனர். பின்னால் இருந்த முதியவர், “என்னப்பா ஆச்சு? கனவு எதுவும் கண்டியா?” என்று பதற்றமாகக் கேட்டார்.

அங்கே யாழினியோ, அந்த இருட்டு உருவமோ இல்லை. ஆனால்… அர்ஜுனின் சட்டையின் நெஞ்சுப் பகுதியில், யாரோ கரியால் தொட்டது போல ஐந்து நீளமான விரல் தடங்கள் பதிந்திருந்தன!

மூச்சு வாங்க அமர்ந்தவன், போனை எடுத்தான்.

இப்போது அந்த ‘புள்ளி’ (.) ஃபோல்டரில் ஆறாவதாக ஒரு புதிய கோப்பு (File) சேர்ந்திருந்தது. அது புகைப்படமல்ல… ஒரு 5 நொடிகள் கொண்ட வீடியோ.

நடுங்கும் விரல்களால் அதை இயக்கினான்.

வீடியோவில் கண்டித் தம்பளாதெனியா வீதியில் உள்ள அதே பழைய மரப் பாலம். அர்ஜுன் தன் கையில் அந்த ‘நீல நிறக் பைண்டர் ஃபைலை’ வைத்திருக்கிறான். அவனுக்கு எதிரே… ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் தலையை, அர்ஜுனே ஒரு பெரிய கல்லால் அடித்து நசுக்கிக் கொண்டிருக்கிறான்!

வீடியோவின் இறுதியில், கேமராவைப் பார்த்து அர்ஜுன் கொடூரமாகச் சிரிக்கிறான். அவனது கண்கள்… முற்றிலும் கருப்பாக, எந்தவித ஒளியுமின்றி இருக்கின்றன!

அர்ஜுன் அதிர்ச்சியில் உறைந்தான்.

“நான்… நான் ஒரு கொலையாளியா? எதிர்காலத்தில் நான் இதையெல்லாம் செய்யப் போகிறேனா… அல்லது என் உடலுக்குள் வேறு ஏதோ தீய சக்தி புகுந்து என்னைச் செய்ய வைக்கிறதா?”

அப்போது அவனது வாட்ஸ்அப்பிற்கு ஒரு குரல் பதிவு வந்தது. அதை ON செய்தான்.

“ரயில் இன்னும் அரை மணி நேரத்தில் கண்டிக்கு அருகில் இருக்கும் தம்பளாதெனியா பாலத்தைக் கடக்கும்… அங்கே உனக்காக ஒரு பிணம் காத்துக் கொண்டிருக்கிறது, அர்ஜுன். அந்தப் பையை எடு… இல்லையென்றால் யாழினியின் ஆவி உன்னை உயிரோடு விடாது!”

ரயில் ஜன்னலுக்கு வெளியே மழை கொட்டத் தொடங்கியது. தூரத்தில்… அந்தப் பழைய மரப் பாலம் மெல்லத் தெரிய ஆரம்பித்தது!

(தொடரும்…)

Leave a Reply