You are currently viewing “இருளின் அழைப்பு” – பகுதி 2

“இருளின் அழைப்பு” – பகுதி 2

நிழல் தொடரும் பாதை

அறை முழுவதும் பரவியிருந்த அமைதியை அர்ஜுனின் வேகமான மூச்சுக்காற்று மட்டுமே கலைத்தது. கையில் இருந்த மொபைல் போன் இன்னும் அவனது உள்ளங்கையைச் சுட்டுக் கொண்டிருந்தது.

“ஆகஸ்ட் 21… காலி முகத்திடல்… ரத்தம்…” அந்த வார்த்தைகள் அவன் மூளையைக் குடைந்து கொண்டிருந்தன.

இரவு முழுதும் அவனால் தூங்க முடியவில்லை. அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏதோ ஒரு உருவம் நிற்பது போன்ற மாயை. ஜன்னல் திரைகள் காற்றில் அசையும் போதெல்லாம், யாரோ உள்ளே எட்டிப் பார்ப்பது போல் தோன்றி அவனை மிரட்டியது.

காலை 5:15 மணி.

அர்ஜுன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான். பயம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு மென்பொருள் பொறியாளனாக இதன் பின்னணியில் உள்ள புதிரை உடைத்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்குள் இருந்தது.

ரயில் நிலையம் வழக்கமான காலை நேரப் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. ரயில்களின் கூச்சல், பயணிகளின் அவசரம், தேநீர் கடைகளின் புகை என எல்லாமே இயல்பாக இருந்தன. ஆனால், அர்ஜுனுக்கு மட்டும் சுற்றியிருந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு சந்தேகத்திற்குரிய நபராகவே தெரிந்தான்.

மேடை எண் 3 இல் நானு ஓயா செல்லும் ரயில் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தது.

மணி 5:50.

அர்ஜுன் அந்த ரயிலை நெருங்கியபோது, அவனது போன் மீண்டும் அதிர்ந்தது. ஒரு புதிய குறுஞ்செய்தி (SMS) வந்திருந்தது.

“பெட்டி எண் S-4, இருக்கை எண் 23. உனக்கான முதல் குறிப்பு அங்கே காத்திருக்கிறது.”

நடுங்கும் கால்களுடன் பெட்டி S-4-க்குள் நுழைந்தான். இருக்கை எண் 23 காலியாக இருந்தது. சுற்றிலும் சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பத்திரிகை படித்துக் கொண்டும் இருந்தனர். அர்ஜுன் அந்த இருக்கையில் அமர்ந்தான்.

இருக்கையின் கீழே ஏதோ தட்டுப்படுவது போல் இருந்தது. குனிந்து பார்த்தபோது, ஒரு சிறிய கருப்பு நிறக் கவர் ஒட்டப்பட்டிருந்தது. அதை எடுத்துப் பிரித்தான். உள்ளே ஒரு பழைய புகைப்படம் இருந்தது.

அது அவனது சிறுவயதுப் படம்! யாழ்ப்பாணத்தில் உள்ள அவனது பூர்வீக வீட்டின் முன் எடுக்கப்பட்டது. ஆனால்… அந்தப் படத்திலும் அவனது முகத்திற்குப் பின்னால், ஜன்னல் வழியே ஒரு பயங்கரமான உருவம் அவனை உற்றுப் பார்ப்பது போலிருந்தது.

அந்த உருவத்தின் கண்கள்… முற்றிலும் கருப்பாக, எந்தவித ஒளியுமின்றி உறைந்திருந்தன.

திடீரென ரயிலின் விளக்குகள் அனைத்தும் அணைந்து மீண்டும் எறிந்தன. ரயில் மெல்ல நகரத் தொடங்கியது.

அர்ஜுன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ரயில் மேடையில், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு நடுவே… முற்றிலும் கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு உருவம் அசையாமல் நின்று இவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

அதன் முகத்தை பார்க்க முயன்ற அர்ஜுனுக்கு இரத்தம் உறைந்துபோனது.

அந்த உருவத்தின் கை விரல்கள்… மனித விரல்களை விட இரு மடங்கு நீளமாகவும், கூர்மையாகவும் இருந்தன! அது தன் நீளமான விரலால் அர்ஜுனின் போனை சுட்டிக்காட்டி, மெல்லத் தன் தலையைச் சாய்த்தது.

ரயில் வேகமெடுத்தது. அந்த உருவம் மெல்ல இருளில் மறைந்தது.

அர்ஜுன் பயத்தில் உறைந்துபோய் தன் போனைத் திறந்தான். அந்த ‘புள்ளி’ (.) ஃபோல்டரில் இப்போது ஐந்தாவதாக ஒரு புதிய புகைப்படம் தானாக உருவாகியிருந்தது!

அதில்… இப்போது அவன் பயணிக்கும் ரயில் பெட்டியின் உள்ளே, இருக்கை எண் 23 இல் அர்ஜுன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குப் பின்னால், அந்த நீளமான விரல்களைக் கொண்ட இருட்டு உருவம் அவனது கழுத்தைப் பிடிப்பதற்காகக் கையை நீட்டிக் கொண்டிருக்கிறது!

அர்ஜுனுக்குக் பின்னால் ஏதோ ஒரு குளிர்ந்த காற்று வீசியது. யாரோ ஒருவரின் கனத்த மூச்சுக்காற்று அவனது பிடறியில் பட்டது….

(தொடரும்…)

Leave a Reply