ஆழத்தின் குரல்.
அர்ஜுன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அங்கே பேரலைகள் கரை உரசி மீள்வதைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. ஆனால், அவனது காலடியில் விழுந்திருந்த சொந்த நிழல்… சற்றே அசையாமல், கடலை நோக்கித் திரும்பி நிற்பது போல அவனுக்குத் தோன்றியது.
உடலில் எழுந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்தியபடி, மீண்டும் தன் புதிய போனின் திரையைப் பார்த்தான். அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட எண் ‘Blocked’ எனக் காட்டியது. ஆனால், புகைப்படத்தின் அடியில் சிறிய எழுத்துக்களில் ஒரு புவியியல் ஆயத்தொலைவு பதிவாகியிருந்தது.
அது கொழும்பு துறைமுகத்திற்கு அருகே உள்ள ஆழ்கடல் பகுதியைக் குறித்தன.
“விக்கிரம் இறந்துவிட்டான்… அப்படியானால் இந்த மெசேஜை அனுப்பியது யார்?” அர்ஜுனின் மூளை ஒரு மென்பொருள் பொறியாளனாக மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அவன் அன்றைய தினமே தன் அலுவலகத்திற்குச் செல்லாமல், நாரஹேன்பிட்டியில் உள்ள தன் அறைக்குத் திரும்பினான். கடலில் வீசப்பட்ட அந்தப் பழைய போன் வெறும் ஹார்ட்வேர் (Hardware) மட்டும்தான். ஆனால், அந்த டிஜிட்டல் வைரஸ் ஒரு குறிப்பிட்ட ‘கிளவுட் சர்வர்’ (Cloud Server) மூலம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டான்.
தன் மடிக்கணினியைத் திறந்து, அந்த புகைப்படத்தில் இருந்த ‘data’ மற்றும் GPS தரவுகளை வைத்துச் சர்வலைத் தேடத் தொடங்கினான்.
திடீரென, அறையின் விளக்குகள் படபடத்து அணைந்தன. மடிக்கணினியின் திரை கருப்பாக மாறி, நடுவில் அதே ‘புள்ளி’ (.) குறியீடு மட்டும் பச்சை நிறத்தில் மின்னியது. கணினியின் ஸ்பீக்கரிலிருந்து ஒரு இயந்திரத் தனமான, ஆனால் மிகக் கூர்மையான குரல் ஒலித்தது:
“அர்ஜுன்… விக்கிரம் வெறும் ஒரு பொம்மை தான். இந்த வைரஸை உருவாக்கியது அவனல்ல… இந்த உலகத்தின் மனித பயங்களை உணவாக உட்கொள்ளும் ‘டார்க் வெப்’ (Dark Web) செயற்கை நுண்ணறிவு!”
அர்ஜுனின் கைகள் விசைப்பலகையின் மேல் உறைந்தன.
“விக்கிரம் அந்த போனை உன்னிடம் விற்கவில்லை. அந்த AI தான் உன்னைத் தேர்ந்தெடுத்தது. ஏனென்றால்… இரண்டு வருடங்களுக்கு முன்பு யாழினி இறந்த விபத்தில், உனக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியும் பயமும் தான் அதற்கு மிகச் சிறந்த தீனி!”
“பொய்! யாழினியின் இறப்பு ஒரு விபத்து!” அர்ஜுன் கத்தினான்.
“அப்படியா? அப்படியென்றால் ஆறாவது வீடியோவை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்…”
கணினி திரையில் அந்த ஆறாவது வீடியோ தானாக இயங்கியது.
கண்டி தம்பளாதெனியா பாலத்தில் ஒருவனின் தலையை அர்ஜுன் நசுக்கும் அந்த வீடியோவில்… ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த மனிதனின் முகம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.
அது விக்கிரமோ, வேறு யாரோ இல்லை… அது அர்ஜுனின் சொந்த முகம்!
வீடியோவில் கொலை செய்வதும் அர்ஜுன்… கொல்லப்படுவதும் அர்ஜுன்!
கணினியின் திரையிலிருந்து ஒரு கிய்ந்த குரல் மீண்டும் ஒலித்தது:”நீ எதிர்காலத்தைத் தடுக்கவில்லை அர்ஜுன். நீ ஏற்கனவே அந்த வைரஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டாய். காலி முகத்திடலில் நீ கடலில் வீசியது போனை அல்ல… உன் சொந்த சுயநினைவை!”
அர்ஜுன் அதிர்ச்சியில் தன் கைகளைப் பார்த்தான். அவனது கைகளில்… மெல்ல மெல்ல அந்த நீளமான, கூர்மையான இருட்டு விரல்கள் வளரத் தொடங்கின!
அறையின் சுவர்களில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. சிதறிய ஒவ்வொரு கண்ணாடித் துண்டிலும்… அர்ஜுன் கொடூரமாகச் சிரிக்கும் பிசாசு போன்ற உருவம் எதிரொளித்தது.
அவனது பாக்கெட்டில் இருந்த போன் மீண்டும் அதிர்ந்தது.
புதிய புகைப்படம்:கொழும்பு நகர வீதியில், கையில் கூர்மையான கத்தியுடன் அர்ஜுன் நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு பின்னால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயந்து அலறி ஓடுகிறார்கள்…
அந்தப் புகைப்படத்தின் கீழ் இருந்த நேரம்: “இன்று மாலை 6:00 PM”.
அர்ஜுன் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5:45 PM!
அவனுக்கு இன்னும் 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கின்றன… தன் உடலையும் மூளையையும் ஆக்கிரமிக்கும் அந்த இருட்டு அரக்கனை நிறுத்துவதற்கா, அல்லது கொழும்பு நகரத்தையே இரத்தக் களறியாக்குவதற்கா?
அர்ஜுன் தன் மேஜையில் இருந்த கூர்மையான கத்தரிக்கோலை எடுத்தான். தன் கையை நோக்கி அதை உயர்த்தினான்…
தொடரும்……
